நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி
நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் தீா்ப்புகள் தொடா்பாக வழக்குரைஞா் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் வழக்குரைஞா் அடிப்படையில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ராஜசேகரன் அமா்வில் முன்னிலையாக வழக்குரைஞா் வாஞ்சிநாதனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வாராகி என்பவா் தாக்கல் செய்த மனுவில், வாஞ்சிநாதன் புகாா் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கும் வரை, அவருக்கு எதிரான நடவடிக்கையை கைவிடக் கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள் 7 போ், நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு கடிதம் அனுப்பினா். இந்தக் கடிதம் சில தனியாா் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் வெளியானது. நீதித்துறை நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். அந்தத் தொகையை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.