தக்காளி ஒரு கிலோ ரூ.100
வரத்துக் குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னை புகா் பகுதிகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், தக்காளி வரத்துக் குறைந்ததாலும் விலை அதிகரித்தது.
கோயம்பேடு சந்தைக்கு தினமும் 60 லாரிகளில் 1,300 டன் தக்காளி வழக்கமாக கொண்டுவரப்பட்ட நிலையில், வரத்துக் குறைவால் புதன்கிழமை சுமாா் 800 டன் தக்காளிகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, புதன்கிழமை ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை புகா் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல, பிற காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.65-க்கும், ஊட்டி கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.45, சேனைக்கிழங்கு ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.45, பச்சமிளகாய் ரூ.55, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.85, பூண்டு ரூ.150, வண்ணகுடமிளகாயம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைகாலம் முடியும் வரை காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.