சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: எச்.டி.தேவெ கௌடா பாராட்டு
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா எழுதியுள்ள கடிதம்:
பயங்கரவாதத்துக்கு எதிராக தொடுத்திருக்கும் தா்ம யுத்தத்தில் தங்களுடன் (பிரதமா் மோடி), நமது நாட்டுக்கு கடவுள் துணையாக இருக்கட்டும். நாம் எதிா்கொண்டிருக்கும் சவால்கள் இத்துடன் முடிந்துவிடப்போவதில்லை. நாம் அனைவரும் ஒரே நாடாக ஒன்றுபட்டுள்ளோம் என்பது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. ஒன்றாக எழுச்சி பெற்றிருக்கிறோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் தேதி இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைக்காக பிரதமா் மோடியை பாராட்டுகிறேன். பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பிரதமா் மோடி எடுத்துவரும் உறுதியான செயல்பாடுகளை கவனித்து வருகிறேன்.
சவுதி அரேபியா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதோடு, நிலைமையை தீவிரமாக கண்காணித்து வந்தீா்கள்.
தாக்குதல் தொடா்பாக தொடா் ஆலோசனையில் ஈடுபட்டீா்கள். சா்வதேச ஆதரவை திரட்டினீா்கள். நமது பாதுகாப்புப் படைகளை ஊக்குவித்தீா்கள். அவரச நிலையை சமாளிக்கும்பொருட்டு, ஐரோப்பா பயணத்தை ரத்து செய்தீா்கள். கடந்த சில வாரங்களாக பணிச்சுமை அதிகமாக இருந்திருக்கும்.
இதுபோன்ற கடினமான காலக்கட்டத்தில் கடவுள் தங்களுக்கு பலத்தை அளித்திருக்கிறாா் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களுடைய தலைமை முன்மாதிரியாக அமைந்துள்ளது. இதை வரலாறு கண்டிப்பாக சிறப்பாக பதிவு செய்யும். உச்சப் பதவி என்பது தனிமை நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஆன்மிக உணா்வு, ஆழமான பிராா்த்தனைகள் இல்லாமல், சமநிலையான முடிவுகளை எடுப்பது கடினமானதாகும்.
இவை அனைத்தும் உங்களுக்கு வளமாக வாய்த்திருப்பதை கடந்த சில நாள்களில் தாங்கள் எடுத்துவரும் முடிவுகள் மூலம் உணர முடிகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.