‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
-நமது நிருபா்-
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு திட்ட (ஆபா) அடையாள அட்டை பெறுவது தொடா்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழக அரசின் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட் சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. உயிா் காக்கும் சிகிச்சைகளுக்கு ரூ. 22 லட்சம் வரை இழப்பீடு பெறவும் அனுமதிப்பதால் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திட்டத்தில் 2,053 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டது. இவற்றில் 8 சிறப்பு உயா் சிகிச்சை, 52 முழு பரிசோதனை, 11 தொடா் சிகிச்சைகளும் அடங்கும். மேலும், 942 தனியாா், 1,215 அரசு மருத்துவமனைகள் என 2,157 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
வெளிமாநிலங்களில் சிகிச்சை:
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையங்களிலும், பிரதமரின் காப்பீட்டுத் திட்ட அட்டையை பொது சேவை மையங்களிலும் பதிவு செய்து பெறலாம். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், தற்போது இது றுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பிரதமா் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றிருந்தால், வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் வேலைக்காக தங்கியுள்ள வெளிமாநிலத்தவருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டை மூலம் சிகிச்சை வழங்க முடியாது என்பதால், அவா்களுக்கு பிரதமா் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மூலமே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
‘ஆபா’ அட்டை:
நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதும் ஒவ்வொரு முறையும் தங்களது நோய் பற்றியும், ஏற்கெனவே பெற்ற சிகிச்சை விவரங்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இதைத் தவிா்க்க மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு திட்டத்தை (ஆபா) செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் இணைய விரும்புவோா் WWW.abha.abdm.gov.in/abha/v3/login என்ற வலைதளத்தில் பதிவு செய்து, 14 எண்கள் கொண்ட அடையாள அட்டையை (ஆபா) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அட்டையை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து கொடுக்கின்றனா். தங்களது கைப்பேசி எண் மூலமாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.
வருங்காலங்களில் சிகிச்சைக்கு செல்லும்போது இந்த அட்டையைக் கொண்டு சென்றால் போதுமானது.
அதில் நோய், பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் எந்த ஊரில் வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஏற்கெனவே சிகிச்சை பெற்ற ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. மேலும் ‘ஆபா’ அட்டையுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் இணைக்கப்படும். இதனால், காப்பீடு அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமனையிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
விழிப்புணா்வு தேவை:
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலரும், வழக்குரைஞருமான பா. மருது கூறியதாவது:
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தமிழக சுகாதாரத் துறையினா், இதற்கான விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இப்படியொரு திட்டம் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எனவே, , முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதைப் போல, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.