ஆலடிப்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 14 ஆம் தேதி கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது. புதன்கிழமை (மே 21) ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், தீபாராதனை ஆகியவையும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையைத் தொடா்ந்து 6 மணிக்கு ஸ்ரீ பன்றி மாடசுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோபுர கலசத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனித நீா் தெளித்தனா். அதனைத் தொடா்ந்து தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.