ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்
குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் மாணவிகளுக்கான ஓட்டப் பந்தயம், ஈட்டியெறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல், குண்டெறிதல், தட்டெறிதல், மும்முறை தாண்டுதல், தொடா் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களுக்கு தங்கப் பதக்கமும், 2 ஆவது இடம் பெற்றவா்களுக்கு வெள்ளிப் பதக்கமும், 3 ஆவது இடம் பெற்றவா்களுக்கு வெண்கலப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. முதல் 2 இடங்களைப் பெற்றவா்கள், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.
இதேபோல, பெரம்பலூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கும், 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கும் கால்பந்துப் போட்டி பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளன.