அரும்பாவூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமானது பெரம்பலூா் மாவட்டத்தில், ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம், 4 வட்டாரத்துக்கும் 12 முகாம்கள், சனிக்கிழமைகள்தோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட அரும்பாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில், 17 உயா் சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சோ்ந்த மருத்துவா்களைக் கொண்டு பல், நீரிழிவு, பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிா், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட துறையினா் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரும்பாவூா் சுற்று வட்டார பொதுமக்கள் இச் சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.