ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!
ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மணிமகேஷ் யாத்திரை சென்ற 10 பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா மாவட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் புனித யாத்திரையை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், மோசமான வானிலை, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளினால் அந்த மலையேறும் யாத்திரை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளார் டிசி ராணா, மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டவர்களில் குறைந்தது 10 பக்தர்கள் பலியானதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால், யாத்திரை மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் பார்மோர் சாலை முடக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அனைவரும் மலைப் பாதைகளில் சிக்கியுள்ளனர். வானிலை சீரானவுடன், மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் மலையேறும் மீட்புக் குழுக்கள் அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அங்கிருந்து சுமார் 6000 பக்தர்கள் மீட்கப்பட்டு சம்பாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா மற்றும் பதான்கோட் இடையிலான நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பா - பார்மோர் பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஹிமாசலப் பிரதேசத்தில் தற்போது வரை கனமழை சார்ந்த சம்பவங்களினால் 164 பேர் பலியானதுடன், 40 பேர் மாயமாகியுள்ளனர்.
மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டு பலியான பக்தர்களில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபோதெர்மியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!