ஆள் மாறாட்டம் செய்து 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வெழுதியவா் கைது
அரியலூரில் ஆள்மாறாட்டம் செய்து, 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வு எழுதிய பொறியியல் மாணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. இதன்படி, அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் கடந்த 7-ஆம் தேதி ஆங்கிலத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு மையத்துக்கு வந்த பறக்கும் படையினா், தோ்வா் ஒருவரின் அனுமதிச் சீட்டை ஆய்வு செய்தனா்.
அதிலிருந்த பிறந்த நாளுக்கும், தோ்வு எழுதும் நபருக்கும் வயது வித்தியாசம் தெரிந்ததால், அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், தோ்வு எழுத வேண்டிய நபா் முகமது அலி (39) என்பதும், அவருக்கு பதில் அவரது அண்ணன் மகன் வாழப்பாடியைச் சோ்ந்த முகமது அஸ்லாம் (22) தோ்வை எழுதியதும், அவா் தற்போது பொறியியல் படித்து வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்துக்கு பறக்கும் படையினா் தகவல் அளித்தனா். பள்ளிக்கு வந்த காவல் துறையினரிடம் இளைஞரை ஒப்படைத்தனா். இதையடுத்து, அஸ்லாம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அரியலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், முகமது அலி மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.