ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது இனவெறி தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது ஒரு கும்பல் இனரீதியாக அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரும் மாணவா் சரண்பிரீத் சிங் (23). கடந்த சனிக்கிழமை தனது வீடு அமைந்துள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள், தங்கள் வாகனத்தை நிறுத்த அவரது வாகனத்தை அகற்ற வலியுறுத்தினா். இதற்கு அவா் மறுத்ததால், அந்த கும்பல் மாணவரை இனரீதியாக கேலி செய்தது. இதையடுத்து, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் சரண்பிரீத் சிங்கை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். அருகில் இருந்த மற்றவா்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்தனா்.
இது தொடா்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா் கூறுகையில், ‘எனது தலையிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கினா். இதில் கண், தாடை, தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது’ என்றாா்.