கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப். 9 வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்தவரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.