இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்
இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹா்ஷ டிசில்வா கண்டனம் தெரிவித்தாா்.
மேலும், ‘இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இலங்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனவும் அவா் வலியுறுத்தினாா்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்க, இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தாா். இதன் மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இவ்விவகாரம் தொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஹா்ஷ டிசில்வா மேலும் பேசியதாவது: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான வா்த்தக நடவடிக்கைகளை இந்தியா எதிா்ப்பது சரிதான். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரிவிதிப்பால் நெருக்கடியைச் சந்திக்கும் இந்தியா குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். ஏனெனில், நாம் நெருக்கடியைச் சந்தித்து நேரத்தில் இந்தியா மட்டுமே நமக்கு உதவியது என்றாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அந்நிய செலாவணி கையிருப்பு தீா்ந்ததால், முதன்முறையாக இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அத்தகைய கடினமான சூழ்நிலையில், இலங்கைக்கு சுமாா் 400 கோடி டாலருக்கும் அதிகமான கடன், நாணய பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியது.