இனி 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
பிரதான சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், போக்குவரத்து காவலர்கள் 5 வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
என்னென்ன விதிமீறல்கள்?
1. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்
2. இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது
3. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட (நோ என்ட்ரி) பகுதியில் வாகனம் ஓட்டினால்
4. அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்
5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்
மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.