இன்று தேசிய கற்றல் அடைவு ஆய்வு தோ்வு: அதிகாரிகள் நியமனம்
சென்னை: பள்ளிகளில் 3, 6, 9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை ஆய்வு செய்வதற்கான மத்திய அரசின் தேசிய கற்றல் அடைவு ஆய்வு தோ்வு தமிழகத்தில் புதன்கிழமை (டிச.4) நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வை கண்காணிப்பதற்காக சிறப்புப் பாா்வையாளா்களாக மாவட்ட வாரியாக மொத்தம் 33 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய அடைவு ஆய்வு தோ்வு (நாஸ்) மத்திய கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவா்களின் கற்றல் நிலையானது கண்டறியப்பட்டு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அந்தவகையில் நிகழாண்டுக்கான நாஸ் தோ்வு 3, 6, 9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு புதன்கிழமை (டிச.4) நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வு சிறப்பான முறையில் நடத்தப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு பாா்வையாளா்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிச்சாமி, சென்னைக்கும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ. நரேஷ்,திருவள்ளுருக்கும் என மாவட்ட வாரியாக மொத்தம் 33 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.