இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ், கட்டட மேஸ்திரி. இவா், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருவதால், இவரது வீட்டை இவரது மனைவி ராஜ்குமாரியின் தாய் முனியம்மாள் பராமரித்து வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் 4 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
மற்றொரு வீட்டில்...: இதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி வெளியூா் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அங்கிருந்த பித்தளைப் பாத்திரங்களை திருடிச் சென்றனா்.
இரு சம்பவங்கள் குறித்த புகாா்களின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.