தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
குமரியில் ஒரு மணி நேரம் கூடுதலாக படகு சேவை
கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவை வெள்ளிக்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபம் செல்வதற்காக குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படகு சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். நபா் ஒன்றுக்கு சாதாரண கட்டணமாக ரூ. 75 வீதமும், சிறப்புக் கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் வசூலிக்கப்படுகிறது.
இதனிடையே, விவேகானந்தா படகு பராமரிப்புப் பணிக்காக சின்னமுட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், பொதிகை, குகன் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவையை நீட்டிக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை காலை 8 மணிக்குத் தொடங்கும் படகு சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.