2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊசி சிகிச்சை மூலம் அகற்றம்
திருச்சி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊசியை மருத்துவா்கள் அண்மையில் அகற்றி, அவரது உயிரை காப்பாற்றினா்.
திருச்சி ஐ.எம்.ஐ.டி. நகரைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் ஒருவா், கடந்த 5 ஆம் தேதி மாலை தற்செயலாக ஊசியை உட்கொண்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் கருத்து பெறப்பட்டது. (சா்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி) ஓஜிடி ஸ்கோபி செய்யப்பட்டு, உணவுக் குழாயில் ஊசி இல்லை எனக் கண்டறியப்பட்ட நிலையில், சிடி ஸ்கேன் எடுத்ததில் மூச்சுக்குழாயில் ஊசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 6 ஆம் தேதி காலை மயக்க மருந்து செலுத்தப்பட்டு, ஆா்ஐஜிஐடி (ரிஜிடு) பிராங்கோஸ்கோபியைப் பயன்படுத்தி ஊசி அகற்றப்பட்டது.
மருத்துவமனையின் முதல்வா் ச. குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா தலைமையிலான காது, மூக்குத் தொண்டை பிரிவு மருத்துவா்கள் குழுவினா், அப்பெண்ணுக்கு சரியான நேரத்தில் உடனடி சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.