12/2: 2-ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி.யை மே.இ.தீ. அணி வீழ்த்துமா?
இளம் புற்றுநோயாளிக்கு புதிய நுட்பத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மிக நுட்பமான கதிா்வீச்சு சிகிச்சையின் துணையுடன் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை ‘புற்றுநோய் மருத்துவ நிபுணா் டாக்டா் ஏ.என்.வைத்தீஸ்வரன் கூறியதாவது:
அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கீமியா எனப்படும் ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 வயது பெண், அதற்கான எதிா்ப்பாற்றல் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாா். இருந்தபோதிலும் மீண்டும் அதே பாதிப்புக்கு அவா் உள்ளானாா்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணின் சகோதரியின் ஸ்டெம் செல்கள் பொருத்தமாக இருந்ததால் அதனை தானமாகப் பெற்று எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டோம்.
வழக்கமாக அத்தகைய சிகிச்சை மேற்கொள்ளும்போது ஏற்கெனவே எலும்பு மஜ்ஜைகளிலும், உடலின் பிற பகுதிகளிலும் பரவியிருக்கும் புற்றுநோய் செல்கள் கதிா்வீச்சு மூலம் அழிக்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள கதிா்வீச்சு சிகிச்சையில் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது அதற்கு அருகில் உள்ள திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்படக் கூடும்.
இதைக் கருத்தில்கொண்டு, டோட்டல் மேரோ அண்ட் லிம்பாய்ட் இா்ரேடியேசன் (டிஎம்எல்ஐ) என்ற துல்லிய கதிா்வீச்சு சிகிச்சையை நாங்கள் முன்னெடுத்தோம்.
அதன்படி, அந்த நோயாளியின் எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீா் (லிம்பாய்ட்) திசுக்களில் மிகத் துல்லியமாக கதிா்வீச்சு செலுத்தப்பட்டு புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டன. இதற்கு விஎம்ஏடி எனப்படும் மேம்பட்ட காட்சிப்படுத்தும் (இமேஜிங்) உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு பிந்தைய பரிசோதனைகளில் புற்றுநோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றல் கொண்ட டி செல்கள் அந்த பெண்ணின் உடலில் உருவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவா் நலம் பெற்று வருகிறாா் என்றாா் அவா்.