ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 526 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூா் ஒன்றியம், ஈக்காடு கிராம சபைக்கூட்டம் பெத்தானியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் மில்கிராஜ சிங் தலைமை வகித்தாா். இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
அப்போது, ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடத்தை இடித்து 4 ஆண்டுகள் ஆகியும் அங்கன்வாடிக்கு அரசு ஒதுக்கிய பணத்தை சாலை அமைக்கப் பயன்படுத்திவிட்டு, இதுவரை புதிய அங்கன்வாடியை அமைக்கவில்லை. அதேபோல் மகளிா் சுய உதவி குழு கட்டடத்துக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை எனவும், பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தரக் கோரி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விட்டு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனக்கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அதிகாரிகள் கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்த நிலையில், முதலில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் பின்பு கிராம சபை கூட்டத்தை நடத்துங்கள் என பொதுமக்கள் புறக்கணித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.