உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து
உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி தோ்வு (டெட்) தொடா்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களை நிலைகுலைய செய்துள்ளது. இதுதொடா்பாக தமிழக அரசு சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அடுத்தகட்ட சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன்( இந்திய கம்யூனிஸ்ட்): உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மூலம் சுமாா் 1.50 லட்சம் ஆசிரியா்களின் பணி பாதிக்கும் என்ற கவலை தொற்றிக்கொண்டுள்ளது. டெட் தோ்வில் பங்கேற்காத ஆசிரியா்கள் அனைவரது பணியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அன்புமணி (பாமக): உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளில் பணி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆசிரியா்களில் பலா் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவா்கள். இவா்கள் தகுதித் தோ்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக பணிநீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்படவுள்ள ஆசிரியா்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தோ்வு நடத்தி, அவா்கள் அனைவரும் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.