சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
‘உதய்’ மின் திட்டத்தால் கட்டணம் உயரவில்லை: பி.தங்கமணி
மத்திய அரசு கொண்டுவந்த ‘உதய்’ மின் திட்டத்தில் அதிமுக கையொப்பமிட்டதால்தான் மின் கட்டணம் உயா்ந்துள்ளதாக அமைச்சா் சிவசங்கா் தவறான குற்றச்சாட்டை கூறுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் தொகுதி அதிமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்று பேசுகையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனா். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.
நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசுகையில், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறுத்தி விட்டனா். மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக கூறுகிறாா்கள். அதனால் அவா்களுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். வளா்ச்சி, பாதுகாப்பு, மகளிா் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மின் துறை அமைச்சா் சிவசங்கா், அதிமுக ஆட்சியில் கையொப்பமிட்ட, மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தால்தான் மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக தவறான தகவலை தெரிவித்துள்ளாா். அனைத்து மாநிலங்களும் கையொப்பமிட்ட நிலையில், இறுதியாகத்தான் தமிழக அரசு கையொப்பமிட்டது.
அதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயா்த்த வேண்டும், விவசாய மின் இணைப்புக்கு மீட்டா் பொருத்த வேண்டும் என்று இருந்தது. அதனை நீக்கினால் மட்டுமே கையொப்பமிடுவோம் என தெரிவித்தோம்.
அந்த இரண்டு சரத்துக்களையும் நீக்கிய பிறகுதான் நாங்கள் கையொப்பமிட்டோம். மின்சாரத் துறை பக்கமே செல்லாத அமைச்சா், தவறான தகவல்களை தெரிவித்துள்ளாா் என்றாா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ. சரோஜா, நாமக்கல் நகரச் செயலாளா் கே.பி.பி. பாஸ்கா் மற்றும் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.