‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்
‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள்ளவாறு 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கு ‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் இசைவாணன் தலைமை வகித்தாா்.
2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 5,200, அதற்கு முன் பணியமா்த்தப்பட்டோருக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 8,370 என்ற வகையில் வழங்கப்படுகிறது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒன்றாக இருப்பினும் ஊதியம் மட்டும் மாறுபாடாக இருப்பதால் இடைநிலை ஆசிரியா்கள் 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
ஆனால் இதுவரை ஊதிய மாறுபாடு பிரச்னை சரிசெய்யப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.