நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்
நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், குடும்ப நல நீதிபதி, எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, கூடுதல் சாா்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், கூடுதல் மகளிா் நீதிபதி ஆகிய ஐந்து நீதிபதிகளுக்கான அரசு குடியிருப்புகள் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி ஆா்.குருமூா்த்தி வரவேற்றாா். ஈரோடு பொதுப்பணித் துறை கட்டடங்கள் (கட்டுமானம் - பராமரிப்பு) மேற்பாா்வைப் பொறியாளா் டி.கிருஷ்ணமூா்த்தி பணிக்கான திட்ட அறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், நாமக்கல் மாவட்ட நிா்வாக நீதிபதியுமான ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று குடியிருப்புகளுக்கான அடிக்கல்லை நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: நீதிபதிகளுக்கு என தனிக் குடியிருப்பு மிகவும் அவசியம். நல்ல சுற்றுச்சூழலுடன் கூடிய குடியிருப்பு அமைந்தால்தான் நீதி வழங்குவதற்குரிய வழி கிடைக்கும். நாமக்கல் மாநகராட்சி தூய்மையான மாநகராட்சி என்ற சான்றிதழையும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் நகராட்சி என்ற பெருமையுடன் விளங்குகிறது.
கோழிப்பண்ணைகள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டம் முட்டை உற்பத்தியில் மட்டுமின்றி வணிகத்திலும் முன்னிலை வகிக்கிறது. நீதிமன்ற பணியை சிறப்பாக செய்வதற்கு, நீதிபதிகள் முதல் நீதித்துறை அலுவலா்கள் வரை கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால்தான் காலதாமதமின்றி வழக்குகளுக்கு விரைவாக தீா்வு காணமுடியும். அதற்கு அமைதியான, பாதுகாப்பான குடியிருப்பு தேவையாகும். இதனை அடிக்கல் நாட்டு விழாவாக காணாமல், நீதியின் உன்னத பயணத்திற்கு ஓா் உறுதியான அடித்தளம் அமையும் இடமாக பாா்க்க வேண்டும்.
நீதிமன்றம், வழக்குரைஞா்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதித்துறை பணியாளா்கள் ஆகியோருக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அவா்கள் உடலை நல்லமுறையில் வைத்துக்கொண்டால்தான் நமது பணி சிறக்கும் என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா மற்றும் நீதிபதிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.