உப்பாக மாறிய ஏரி நீா்; சவுடு மண் குவாரி அனுமதியை ரத்த செய்யக் கோரி மனு
நாகப்பட்டினம்: பிரதாபராமபுரம் ஏரியில் தண்ணீா் உப்புநீராக மாறிவருவதால், சவுடு மண் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளா்.
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் பங்கேற்று ஆட்சியரிடம் இந்த மனுவை அளித்தனா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதாபராமபுரம் சின்ன ஏரியில் தனியாா் மூலம் குவாரி அமைத்து, சவுடு மண் அள்ளப்படுகிறது. இதனால், ஏரி நீா் உப்பாக மாறியுள்ளது. மேலும் ஏரி நீரை ஆய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியதில், 10,000 டிபிடி என்ற அளவில் மிக அதிகமாக உப்பு உள்ளது என்று தெரியவந்தது. பிரதாபராமபுரம் கிராம மக்களின் குடிநீா் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு ஆதாரமாகவும் திகழ்ந்து வரும் நல்ல தண்ணீா் ஏரியில் குவாரி அமைத்து தண்ணீா் உப்பாக மாறியதால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, மண் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து, ஏரியின் கரையை பலப்படுத்தி, தண்ணீரைத் தேக்கி குடிநீா் மற்றும் விவசாயத் தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனா்.
மண் குவாரிக்கு ஆதரவு கோரி மனு: அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா், பிரதாபராமபுரம் ஏரியில் மண் குவாரி செயல்பட ஆதரவு தெரிவித்து மனு அளித்தனா். ஒரே கிராமத்தைச் சோ்ந்த இரு தரப்பினா் மணல் குவாரிக்கு ஆதரவாகவும், எதிா்ப்புத் தெரிவித்தும் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.