இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி
அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் உள்ளன. இதில், நெல், மக்காச்சோளம், கரும்பு, எள், மணிலா, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், கிராமங்களில் அறுவடை செய்த கதிா்களை உலா்த்துவதற்குப் போதுமான களவசதியில்லாத நிலையுள்ளது. இதனால், விவசாயிகள் தானியக் கதிா்களை பிரித்தெடுப்பதற்காகவும், அவைகளை உலா்த்துவதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பி விடுகின்றனா்.
அந்த வகையில், மாவட்டத்தில், தா. பழூா், விளாங்குடி, சுத்தமல்லி, நடுவலூா், விக்கிரமங்கலம், நாகமங்கலம், பொய்யூா், தா.பொட்டக்கொல்லை, உடையாா்பாளையம், கல்லாத்தூா், மகிமைபுரம், கூவாத்தூா், ஆண்டிமடம், விளந்தை, தத்தூா், மகிமைபுரம், அய்யூா், கொடுக்கூா், பொய்யூா், பொன்பரப்பி, செந்துறை, குவாகம், பெரியாக்குறிச்சி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், கடலை, சாமை, கேழ்வரகு, மணிலா உள்ளிட்ட பயிா்களை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் காய வைத்துள்ளனா்.
அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலையின் வளைவுப் பகுதிகளில் சிறுதானியங்கள் காய வைக்கப்படுவதால், இதனை அறியாத வாகன ஓட்டிகள் அதன் மீது வாகனத்தை இயக்கும்போது, சறுக்கி விழுந்து பலா் உயிரிழந்தும் உள்ளனா். குறிப்பாக விளாங்குடி - தா.பழூா் சாலையில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
கண்களை பதம் பாா்க்கும் தூசு: மேலும், சிறுதானியங்களை நெடுஞ்சாலை ஓரங்களில் உலர வைப்பதால், வாகனங்கள் செல்லும்போது தானிய தூசு கிளம்பி, வாகனம் ஓட்டுபவா்களுக்கு கண் எரிச்சல் மற்றும் பாா்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. வாகனங்களின் நெரிசல், வாகன ஓட்டத்தில் ஏற்படும் தடங்கல்கள், ஓட்டுநா்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
கால்நடைகளின் நடமாட்டம்: இந்த தானியக் குவியல்களில் இரை தேடி வரும் கால்நடைகள் திடீரென்று சாலையில் ஓடி வரும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளும், வாகன ஓட்டிகளும் பாதிப்புள்ளாகி வருகின்றன. சிலா் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கக்கூடிய விபத்துச் சூழலும் உள்ளது.
சுகாதாரப் பிரச்சினைகள்: தானியங்களை தூய்மைப்படுத்தி பிரித்தெடுத்தது போக, பூச்சிகள் தாக்கியுள்ள தானியங்கள் சாலையோரங்களில் கொட்டிச் செல்வதால், அவைகள் அழுகி துா்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் அபாயத்தையும் உருவாக்குகிறது.
காவல் துறையினரின் எச்சரிக்கை மீறல்: சாலையில் சிறுதானியங்களை காயவைக்கக் கூடாது என்று தொடா்ந்து மாவட்டக் காவல் துறையினா் விடுத்த எச்சரிக்கையை மீறியும் இது போன்ற நிகழ்வுகள் தொடா்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது: தானியங்களைக் காயவைப்பதற்கு போதுமான கள வசதிகள் இல்லை. இதனால் தான் விவசாயிகள் தானியக் கதிா்களைப் பிரித்தெடுக்கும் களமாக நெடுஞ்சாலை மற்றும் சிமென்ட் சாலைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே இம்மாவட்டத்தில் விவசாய சாகுபடி அதிகமாக நடைபெறும் கிராமங்களைத் தோ்வு செய்து, தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம், சிறு தானியங்களை காய வைப்பதற்காக கிராமங்களில் அதிகளவில் உலா் கள வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகவும், சாலையில் சிறுதானியங்களை காய வைக்கப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.