உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!
நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது குறித்ட்து அவரது மனைவி, “சிறிய பிரச்னைக்கு கொலை செய்துள்ளார்கள்” என அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.
தென் கிழக்கு தில்லியான போகல் பகுதியில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்னையால் ஹுமா குரேஷியின் சகோதரர் ஆசிப் குரேஷி (42) உயிரிழந்துள்ளார்.
போகல் பகுதியில் சர்ச் தெருவில் வியாழக்கிழமை (ஆக.7) இரவு ஏற்பட்ட பார்க்கிங் தகராறில் உஜ்வால் (19), கௌதம் (18) என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கூர்மையான பொருளினால் ஆசிப்பை மார்ப்பில் தாக்கியதில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கொலை செய்யப்பட்ட ஆசிப்பின் மனைவி ஷாஹீன் ஆசிப் குரேஷி கூறியதாவது:
வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கிய இளைஞர்கள்..
எங்களது வீட்டுக்குள் போகும் வழியை மறைக்கும் விதமாக கேட்டின் முன்பாக இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
அந்த வண்டியை சிறிது நகர்த்துமாறு அந்த இளைஞரிடம் எனது கணவர் தன்மையாகக் கேட்டார். அதற்கே அந்த இளைஞர் மிகவும் ஆபாசமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
வண்டியை எடுக்கிறேன் என்று சொல்லாமல் அவர் இன்னும் கூடுதலான் ஆட்களை கூட்டிவந்து வசைபாடத் தொடங்கினார்.

இந்த வாக்குவாதத்தில் உஜ்வால் திடீரென எனது கணவர் மார்பில் குத்தியதால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ரத்தம் வடிந்த அவரை நான் காப்பாற்ற முயன்றேன். நான் அங்கிருந்து தள்ளிவிடப்பட்டேன். அங்கு வசிக்கும் பலரும் அவரைத் தாக்கினார்கள்.
உள்நோக்கத்துடன் தாக்குதல்...
இதே கூட்டத்தினால் கடந்த நவம்பரில் எனது கணவர் தாக்கப்பட்டார். எந்தவித காரணமுமே இன்றி அவர்கள் பொறாமையினால் இவருடன் சண்டையிட்டார்கள்.
அந்த வண்டியைச் சிறிது தள்ளியிருந்தாலே பிரச்னை முடிந்திருக்கும். ஆனால், இதற்காக நெஞ்சில் கூர்மையான ஆயுதத்தினால் குத்தினார்கள். அவர்கள் அதை உள்நோக்கத்துடனே செய்துள்ளார்கள்.
எனது கணவர் சிக்கன் விற்பனையாளராக இருக்கிறார். இந்த சண்டையில் தொடர்புடையவர்களிடம் அரிதாகத்தான் பேசுவார்.
நாங்கள் எப்போதும் அவர்களுடன் பேசியதில்லை. அருகில் இருப்பவர்களுடன் எங்கள் குடும்பம் மாதிரிதான் இருந்தோம். ஆனால், இவர்கள் காரணமே இன்றி எனது கணவரை எதிரியாக நடத்தினார்கள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் உடனடியாக எனது மைத்துனருக்கு கால் செய்தேன். விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவர்கள் எனது கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.