உ.பி: ரமலான் நோன்பு தொடங்க காத்திருந்த இளைஞர் சுட்டுக் கொலை... போலீஸ் விசாரணை!
உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் என்ற இடத்தைச் சேர்ந்த ஹாரீஸ் என்ற கட்டா என்பவர் தனது வீட்டிற்கு வெளியில் அதிகாலை 3.15 மணிக்கு நின்று கொண்டிருந்தார். அவர் முன்னதாக கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்திருந்தார். அதிகாலையில் ரம்ஜான் நோன்பு தொடங்க இருந்தது. நோன்பு தொடங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்காக காத்திருந்தார். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் இருந்ததால் அந்நேரம் வீட்டிற்கு வெளியில் வந்து தனது நண்பர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தார். அந்நேரம் இரண்டு பைக்குகளில் நான்கு பேர் அந்த வழியாக வந்தனர். ஹாரீஸுடன் நின்று கொண்டிருந்த நபர் அங்கு இருந்த படிக்கட்டில் அமர சென்றார். அப்போது பைக்கில் வந்தவர்கள் ஹாரீஸ் அருகில் தங்களது பைக்கை கொண்டு வந்தனர். முதல் பைக்கில் பின்புறம் இருந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஹாரீஸை சுட முயன்றார். உடனே ஹாரீஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்றார்.

ஆனால் அதற்கு முன்பாக பைக்கில் வந்த நபர் இரண்டு முறை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் ஹாரீஸ் கீழே விழுந்தார். முதல் பைக்கில் இருந்தவர்கள் தப்பிச்சென்ற நிலையில் இரண்டாவது பைக்கில் பின்புறம் இருந்த நபர் வந்து மூன்று முறை ஹாரீஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து ஹாரீஸை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஹாரீஸ் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது. கொலைக்கான வேறு காரணங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.