முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
'எங்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே....' - உழைப்போர் உரிமை இயக்கத்தின் உருக்கமான கடிதம்
தனியார்மயத்தை எதிர்த்து சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 'மாண்புமிகு முதல்வருக்கு வணக்கம்.
* சென்னையின் பூர்வகுடிகள், அருந்ததியர், ஆதிதிராவிடர், அனைத்து சாதி ஏழைகள், பெண்கள், ரிப்பன் மாளிகை வாயிலில் தமக்கு விதிக்கப்பட்ட பொருளாதார மரண தண்டனைக்கு எதிராக, நேற்று 12வது நாளாக பிளாட்பார்மில் வெயிலில் மழையில் அமர்ந்து இருந்தனர்.
* நீங்கள் சற்று தொலைவில் உள்ள பாரிமுனையில், கியூபாவுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, ஃபிடல்காஸ்ட்ரோ நினைவு போற்றி உள்ளீர்கள். எங்களில் பாதி, கம்யூனிஸ்டுகள் என் பெயரே ஸ்டாலின் என்று சொல்லி உள்ளீர்கள்.
* உங்களை மாநகராட்சி புரிந்து கொள்ளவில்லை. உங்கள் நற்பெயருக்கு, ஆட்சிக்கு, வேண்டுமென்றே களங்கம் உருவாக்குகிறது. நீங்கள், 2021லேயே, உங்கள் பெயருக்கு ஏற்ப, மாநகராட்சி வேலையை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கச் சொன்னீர்கள். அவர்கள் பணிகளை பாராட்டினீர்கள்.
* மாநகராட்சியில் பணிப்பாதுகாப்போ, நல்ல சம்பளமோ, விடுப்போ, மேலான சலுகைகளோ கொடுப்பதில்லை, கொடுக்க மாட்டோம்; அவை தனியாரிடம் தான் கிடைக்கும் என, அரசை அவமானப்படுத்துகிறார்கள். தாங்கள் 2021 முதல் தடுத்து நிறுத்திய தனியார்மயத்தை, தேர்தலுக்கு முன்பு மூர்க்கமாக முன் நகர்த்துகிறார்கள்.
* உங்களுக்கு, அவதூறுகளையும் சுட்டிக்காட்டுதல்களையும் தெளிவாக பிரித்துப் பார்க்க முடியும் என்று சொல்லி உள்ளீர்கள்.
* "ஸ்டாலின்" சொன்னதை, கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் நம்பாமல் இருக்க முடியுமா?

நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்:
* ஒப்பந்தக்காரர் சமூக சேவை செய்ய, மக்கள் தொண்டாற்ற, வேலையை எடுக்கவில்லை. சில நூறு கோடிகளை சில ஆயிரம் கோடிகளாக்க, சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கவே வருகிறார்கள். அங்கே சட்ட கூலி நிச்சயமாக கிடைக்காது. பணிப் பாதுகாப்பு, சுயமரியாதை இருக்காது. இதனை நன்கு உணர்ந்து தான், உங்கள் நிலைப்பாடு 2021 இல் எடுக்கப்பட்டது.
* நாங்கள், பணி நிரந்தர கோரிக்கையை, தொழில் தீர்ப்பாய அசல் மனுக்கள் 66/67/2025-வழக்குகளில் பார்த்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறோம்.



* ஏற்கனவே, மாநகராட்சி 6வது மண்டல தூய்மை பணிகளை, நாள் கூலி ரூ.753க்கு எமது தொழிலாளர்கள் சுமார் 1200 பேர் 30/9/2025 வரை செய்ய தீர்மானம் போட்டுள்ளது. நிதி ஒதுக்க, அந்தத் தீர்மானம் இடம் தந்துள்ளது. இதனையே, 5வது மண்டலத்திற்கும் செய்யலாம். தீர்வு அப்படி ஒன்றும் கடினமானதல்ல.
* இதற்கு முன் தனியார்மயம் நடந்த எங்கும், உயர் நீதிமன்ற இரு அமர்வங்கள் கடந்து, மீண்டும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தி, “அவுட்சோர்சிங்” நியாயம்தானா என்ற வழக்கு எழுவினா தொழில் தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பப்பட்டதில்லை. ஆகவே, நீதிமன்ற அனுமதி வாங்காமல் சட்டவிரோத தனியார்மயம் என்ற நிலை, அவற்றில் எழவில்லை. இங்கே அது நடந்துள்ளது.
* மாநகராட்சி constitution பக்கம் நிற்பதற்கு பதிலாக, contractor பக்கம் நிற்கிறது.

* தாங்கள் சட்டத்தின் ஆட்சிப்படி, முதலில் 30/09/2025 வரை 5,6 மண்டலங்களில் 31/07/2025 தேதியில் இருந்த நிலைமைப்படி, தூய்மை பணியாளர்களை கொண்டு செல்ல உதவுங்கள்.
* "எங்களோடு ஸ்டாலின்" என, தூய்மை பணியாளர்களை சொல்ல வையுங்கள்.
* ஆர்.என்.ரவி தவிர அனைவரும் ஆதரிப்பதை, பெரியாரின் அண்ணாவின் விருப்பப்படி நீங்கள் செய்யுங்கள். உங்கள் தந்தையார் மடி நிறைய பணமும் மனம் நிறைய இருளும் உள்ளவர்களால், எளிய மக்கள், “ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்” என்ற நிலையைப் பற்றி வருந்தியும் குமுறியும் எழுதினார்.
* நீங்கள், சென்னையின் பூர்வ குடிகளுக்கு, அடித்தட்டு மக்களுக்கு, பெண்களுக்கு, ஏழைகளுக்கு, மாநகராட்சி விதித்துள்ள பொருளாதார மரண தண்டனையை ரத்து செய்து, நியாயம் வழங்குங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.