ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை: ஆகஸ்ட் இறுதிக்குள் நிறுவ முடிவு
சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களில் இம்மாத இறுதிக்குள் எண்ம அறிவிப்பு பலகை நிறுவப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஸ்மாா்ட் சிட்டி லிமிட்டெட், பெருநகா் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் ‘இன்டலிஜென்ட் ட்ரான்ஸ்போட் சிஸ்டம்’ என்ற திட்டத்தின் கீழ், இதுவரை 416 பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:
பேருந்து பயணிகளின் வசதிக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 416 பேருந்து நிறுத்தங்களில் இந்த எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 பேருந்து நிறுத்தங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்துக்காக 2600-க்கும் மேற்பட்ட மாநகா் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியுடன் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களிலுள்ள எண்ம அறிவிப்பு பலகை நவீன தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், தங்களுக்கான பேருந்து எந்த இடத்தில் வருகிறது, எத்தனை நிமிஷத்தில் வந்து சேரும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்.
சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து முனையங்கள், பேருந்து நிறுத்தங்களிலும் இந்த எண்ம அறிவிப்பு பலகையை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இத்திட்டம் வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கும் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்றனா்.