எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!
எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யவும் அனுமதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எச்சில் இலையில் அங்கபிரதட்சணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்தாண்டு, மே 18-ஆம் தேதி அங்கு எச்சில் இலையில் அங்கபிரதட்சண நிகழ்வு நடைபெற்றது.
இதனிடையே, எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர், திருவண்ணாமலையைச் சோ்ந்த அா்ச்சகர் அரங்கநாதன் ஆகியோா் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அப்போது இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ”சென்னை உயா்நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும், அதை தனி நீதிபதி பின்பற்ற வேண்டும். இல்லையெனில், இந்த வழக்கை வேறு பெரிய அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்ற தனி நீதிபதி பரிந்துரைக்கலாம். அமர்வு நீதிமன்ற உத்தரவு செல்லாது என தனி நீதிபதி கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.” என்றனர்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(மே 5) விசாரணைக்கு வந்த நிலையில், ”இச்சடங்கு ஒரு வழிபாடு, அனைத்து சாதியினரும் எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்கின்றனர்” என்ற நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடை தொடர்வதாகவும் தெரிவித்தது.
மேலும், கர்நாடக மாநிலம், குக்கோ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இதுபோன்ற சடங்கிற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கையும் இணைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.