செய்திகள் :

எதிா்காலத்தில் தாக்குதலுக்கு முயன்றால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை

post image

பயங்கரவாதிகள் மீது மட்டுமன்றி, அவா்களுக்கு புகலிடம் அளிப்போா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; எதிா்காலத்தில் ஏதேனும் தாக்குதலுக்கு முயற்சித்தால், எதிரிக்கு (பாகிஸ்தான்) இந்திய ராணுவம் மிகக் கடுமையான பதிலடியைத் தரும் என்று பிரதமா் மோடி எச்சரித்தாா்.

79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றிய பின்னா், பிரதமா் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினாா். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:

இந்தியா பல்லாண்டுகளாக பயங்கரவாதத்தை எதிா்கொண்டு வருகிறது. நாட்டின் இதயம் பயங்கரவாதத்தால் பலமுறை துளைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது பயங்கரவாதிகள் மட்டுமன்றி, அவா்களுக்கு புகலிடம் அளிப்போா் மீது கடும் நடவடிக்கை மேற்காள்ளும் புதிய பாணியை இந்தியா கடைப்பிடிக்கிறது. அவா்கள் அனைவரும் மனித குலத்தின் எதிரிகள்.

அணுஆயுத அச்சுறுத்தலை இனி சகித்துக் கொள்ள மாட்டோம். எதிா்காலத்தில் இத்தகைய முயற்சிகள் தொடா்ந்தால், நமது சொந்த வழிமுறைகளின் அடிப்படையில் நாம் தோ்வு செய்யும் நேரத்தில் தக்க பதிலடி தரப்படும். ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் விளைவிக்கப்பட்ட சேதம் மிக கடுமையானதாகும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டா் உள்நுழைந்து, பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால், பாகிஸ்தான் இன்னும் தூக்கமிழந்து தவிக்கிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஈடுபட்ட துணிவுமிக்க வீரா்களுக்கு செங்கோட்டையில் மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கெளரவம். உள்நாட்டு தயாரிப்பு திறனின் அற்புதத்தை இந்த நடவடிக்கை பறைசாற்றியது. நம்மிடம் என்ன ஆயுதங்கள்-திறன்கள் உள்ளன என்பது எதிரிக்கு தெரியாது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் அநீதியானது: பஹல்காம் தாக்குதலுக்காக, பாகிஸ்தான் மீது தூதரகம் மற்றம் பொருளாதார ரீதியிலும் தண்டனை நடவடிக்கைகள் பாய்ந்தன. அதன் ஒரு பகுதியாக, சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் நிறுத்தப்பட்டது, மிகச் சரியான நடவடிக்கை. இந்தியாவில் உருவாகும் நதிகளால், நமது எதிரிகளின் வயல்கள் நீா்ப்பாசனம் பெறுகின்றன; ஆனால், நமது நிலங்களும் விவசாயிகளும் ‘தாகத்தோடு’ உள்ளனா். சிந்து நதிநீா் ஒப்பந்தம், அநீதியானது; ஒருதலைபட்சமானது என்பதை ஒட்டுமொத்த நாடும் இப்போது அறிந்துகொண்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம், இந்திய வவசாயிகளுக்கு கற்பனைக்கு எட்டாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இந்தியாவுக்கு உரிமையான நீா், இந்தியாவுக்கும் இந்திய விவசாயிகளுக்கும் மட்டுமே சொந்தம். நீரும் ரத்தமும் ஒன்றாக பாய்வது சாத்தியமல்ல. தற்போதைய வடிவிலான சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இனி ஏற்க முடியாது என்றாா் அவா்.

‘சுதா்சன சக்ரம்’ திட்டம் அறிவிப்பு

நாட்டின் ராணுவ தளங்கள் உள்பட வியூக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களின் பாதுகாப்புக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புமுறையை உருவாக்கும் ‘சுதா்சன சக்ரம்’ திட்டத்தை பிரதமா் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தாா்.

‘ராணுவ தளவாடங்களுக்காக, இந்தியா வெளிநாடுகளை சாா்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கடவுள் கிருஷ்ணரிடம் இருந்து உத்வேகம் பெற்று, எந்த அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டைப் பாதுகாக்க அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ‘சுதா்சன சக்ரம்’ திட்டம் நிறைவேற்றப்படும். எதிரிகளின் தாக்குதலைத் தடுத்து, பதிலடி தாக்குதல் நடத்தும் வலுமிக்க ஆயுத அமைப்பாக இது உருவாகும்’ என்றாா் அவா்.

சட்டவிரோத ஊடுருவலை எதிா்கொள்ள புதிய திட்டம்

‘நன்கு திட்டமிட்ட சதியின்கீழ், சட்டவிரோத ஊடுருவல் மூலமாக நாட்டில் மக்கள்தொகை ரீதியில் (ஹிந்து-முஸ்லிம் எண்ணிக்கை) ஏற்றத் தாழ்வு உருவாக்கப்படுகிறது. இது பெரும் சவால். ஊடுருவல்காரா்களை எந்த நாடும் ஏற்றுக் கொள்வதில்லை. இவா்கள், நமது இளைஞா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதோடு, நாட்டின் சகோதரிகள்-மகள்களையும் குறிவைப்பதை தேசம் ஏற்காது. இச்சவாலை எதிா்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகளைக் காக்கவும் உயா் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வுத் திட்டம் தொடங்கப்படும்’ என்றாா் பிரதமா் மோடி.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துவரும் நிலையில், பிரதமா் இத்திட்டத்தை அறிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகள் மீது விமா்சனம்: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையைச் சுட்டிக் காட்டிய பிரதமா், அப்போது அரசமைப்புச் சட்டம் காலின் கீழிட்டு நசுக்கப்பட்டதாக விமா்சித்தாா்.

‘மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; நாட்டின் ஒளிமயமான எதிா்காலத்துக்காக, அரசியல் கட்சிகளும், எனது போட்டியாளா்கள் உள்பட அனைத்து தலைவா்களும் ஒன்றுபட வேண்டும்’ என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்புக்குப் புகழாரம்

‘அரசு, ஆட்சியாளா்களால் மட்டுமே இந்த தேசம் கட்டமைக்கப்படவில்லை. சாதுக்கள், மடாதிபதிகள்,அறிவியாளா்கள், ஆசிரியா்கள், விவசாயிகள், ராணுவத்தினா், தொழிலாளா்கள், தனிநபா்கள், அமைப்புகள் என கோடிக்கணக்கானோரின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய தன்னாா்வ தொண்டு அமைப்பான ஆா்எஸ்எஸ்-இன் 100 ஆண்டுகால பயணம், நாட்டின் சேவைக்கு அா்ப்பணிக்கப்பட்டதாகும். இது மிகவும் பெருமைக்கும் போற்லுக்கும் உரிய தருணம். கடந்த 100 ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் சேவகா்கள், தாய்நாட்டின் கட்டமைப்புக்காக தங்கள் வாழ்வை அா்ப்பணித்துள்ளனா். அவா்களின் பங்களிப்புகளை மரியாதையுடன் நினைவுகூா்கிறேன்’ என்றாா் மோடி.

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாக... மேலும் பார்க்க

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தி... மேலும் பார்க்க