`எனக்கு பிடித்த கதாபாத்திரம்' - மகாபாரத கதையில் நடிக்க விரும்பும் நடிகர் ஆமீர் கான்
ராமாயாணம் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வருகிறார். இப்போது விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ண வேடத்தில் ஆமீர் கான் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் மகாபாரதத்தை பல பகுதிகளாக படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது தனது கனவு என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கான வேலையில் விரைவில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் மகாபாரதத்தில் தான் கிருஷ்ணராக நடிக்க விரும்புவதாக ஆமீர் கான் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். மகாபாரதத்தை படமாக எடுக்க இருப்பது குறித்து ஆமீர் கான் அளித்துள்ள பேட்டியில், ''மகாபாரதம் தயாரிக்க வேண்டும் என்பது எனது கனவு. இது ஒரு கடினமாக கனவு. மகாபாரதம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது. ஆனால் நீங்கள் மகாபாரதத்தை ஏமாற்றலாம்.

மகாபாரத கதை
ஜூன் 20, சிதாரே ஜமீன் பர் படம் வெளியான பிறகு மகாபாரத்திற்கான வேலையில் ஈடுபடுவேன். நான் முயற்சி செய்கிறேன். ஆனால் இது பெரிய திட்டம். அது பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை''என்றார்.
மகாபாரத்தில் நீங்கள் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''எனக்கு கிருஷ்ணரின் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டேன். எனவேதான் அக்கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்''என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மகாபாரதம் பல பகுதிகளாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதனை தான் தயாரிக்கப்போவதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஆமீர் கான் குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக மட்டும் இருப்பேன் என்று சொன்ன ஆமீர் கான் இப்போது அதில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பின்னர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்துவதில் ஆமீர் கான் தீவிரமாக இருக்கிறார்.