"என் குடும்பமே விஷம் குடித்துவிட்டது; நானும்..." - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் விபரீத முடிவு
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளூர்வாசி ஒருவர் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் உத்தரகண்ட் நம்பர் பிளேட்டுடன் மற்றொரு கார் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
காருக்கு மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். காருக்குள்ளும் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த நபரிடம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
உடனே காரில் இருந்த நபர், "நாங்கள் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு உத்தரகாண்ட் சென்று கொண்டிருக்கிறோம். வழியில் தங்குவதற்கு ஹோட்டல் எதுவும் இல்லை. அதனால் காரை இங்கு நிறுத்தி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
உடனே அந்த நபர் காரை இங்கு நிறுத்தக்கூடாது என்றும், மார்க்கெட் பகுதியில் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே கார் மேல் இருந்த நபர் அதிலிருந்து இறங்கி காருக்குள் சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உள்ளூர்வாசி காருக்குள் எட்டிப்பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார்.
உள்ளே ஆறு பேர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தனர். கார் முழுக்க துர்நாற்றம் வீசியது.
இது குறித்து உள்ளூர்வாசி கூறுகையில், ''நான் காருக்குள் எட்டிப்பார்த்தபோது 6 பேர் காருக்குள் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தனர்.
உடனே காரில் இருந்த நபரை வெளியில் இழுத்து என்னவென்று விசாரித்தேன். அவர் தனது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதாகவும், நானும் இன்னும் 5 நிமிடத்தில் இறந்துவிடுவேன் என்றும் என்று தெரிவித்தார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன்.
அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் 6 பேர் இறந்துவிட்டனர். காருக்கு வெளியிலிருந்த நபர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்'' என்றார்.
இது குறித்து பஞ்ச்குலா துணை போலீஸ் கமிஷனர் கெளசிக் கூறுகையில், ''6 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டுச் சென்றோம். அங்குச் சென்றபோது அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரும் இறந்துவிட்டார். அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அவர்கள் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளனர். கடுமையான கடன் தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்றார்.
தற்கொலை செய்த குடும்பத் தலைவர் பிரவின் மித்தல் என்று தெரிய வந்துள்ளது. அவருடன் அவரது வயதான பெற்றோர், மனைவி, பிள்ளைகள் தற்கொலை செய்திருந்தனர்.
அவர்களது சொந்த ஊர் உத்தரகண்ட் ஆகும். அவர்கள் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வரும் வழியில் விஷம் குடித்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb