என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர்: பிரதமர் மோடி
என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் தான் ஓடுகிறது என்று பிகானேர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,
பிகானேரில் கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்றேன். ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது. என் மனம் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ரத்தம் கொதிக்கின்றது. என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, சூடான சிந்தூர்.
ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகமோ, பேச்சுவோ இருக்காது, பேச்சு நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான்.
இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். பஹல்காமில் இந்திய பெண்களின் நெற்றிப்பொட்டான சிந்தூர் அழிக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர். அவர்களுக்குக் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்க இந்தியா முடிவு செய்தது.
இதன் காரணமாகவே ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்களையும் 22 நிமிடத்தில் இந்தியப் படைகள் அழித்துள்ளனர். நமது முப்படைகளில் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்து அதை நிரூபித்துள்ளனர்.
இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இந்தியா அமைதியாக இருக்கும் என்று எண்ணியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று அவர் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா சார்பில் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.