எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல்! நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு
மானாமதுரை அருகே உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்க மறுத்ததோடு உரிமையாளா், ஊழியரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதுரை இந்தியன் ஆயில் டீலா் அசோசியேசன்(சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்) சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத்திடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கேப்பபட்டியில் எங்கள் சங்க உறுப்பினா் முகமது இக்ராமுல்லா கடந்த 17 ஆண்டுகளாக எரிபொருள் நிலையத்தை நடத்தி வருகிறாா்.
கடந்த 12-ஆம் தேதி இரவு, விளாங்குளத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அஜய், இரு சக்கர வாகனத்தில் வந்து ரூ.100-க்கு பெட்ரோலை நிரப்பினாா். அவரிடம் பணத்தைக் கேட்டபோது, தராமல் சென்றாா். பின்னா் மீண்டும் வந்த அவரும், அவருடன் வந்த மூவரும் எரிபொருள் விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து உரிமையாளா், அவரது மகன், ஊழியா் தா்மதுரை ஆகியோரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினா்.
மேலும், எரிபொருள் நிலையத்தைத் தீ வைத்து கொளுத்துவோம் என மிரட்டியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளா்களின் வாகனங்களையும் சேதப்படுத்தினா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் இன்னும் எங்கள் பகுதியில் சுற்றி வந்து, வழக்கைத் திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துகின்றனா். தாக்குதல் நடந்தபோது பதிவான கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும் இணைத்துள்ளோம்.
எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.