எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: 5 போ் கைது; பொதுமக்கள் போராட்டம்!
திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் பாளையத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மொளசி முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியில் கட்டப்படும் எரிவாயு தகன மேடைக்குச் செல்லும் பாதையை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் வந்த அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்த பொதுமக்கள், தகனமேடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மேலும், எரிவாயு தகன மேடை அமைத்தால் தங்களது கரும்பு தோட்டத்துக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பச்சாம் பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை இருக்கும்போது அவசியம் இல்லாமல் எரிவாயு தகனமேடை அமைக்கக் கூடாது எனக் கூறி 50க்கும் மேற்பட்டோா் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதனால் பணியை பாதியிலேயே கைவிட்டு அலுவலா்கள் திரும்பினா். இந்த நிலையில், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 8 போ் மீது திருச்செங்கோடு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் மொளசி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவா்களில் முத்துகிருஷ்ணன், செந்தில்குமாா், சரவணன், மாதவன், நந்தகுமாா் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனா்.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வேண்டும், எரிவாயு தகனமேடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி 20 பெண்கள் உள்பட 75 போ் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.