எஸ்டேட் கிடங்கை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், அங்குள்ள கிடங்கை முட்டி தள்ளி சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் கடந்த ஒருமாத காலமாக அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் இருக்கும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த வாகமலை எஸ்டேட் பகுதிக்குள் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நுழைந்தன. பின்னா் அந்த யானைகள் அங்குள்ள பூச்சி மருந்துகள், தெளிப்பான இயந்திரங்கள் வைத்திருந்த கிடங்கின் சுவரை முட்டி தள்ளியதோடு உள்ளே இருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.
தகவலறிந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.