முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா 15இல் துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ஆம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
ஜூலை 15ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்தைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருள்மிகு அருணாசல சுவாமி திருக்கோயிலை வலம் வருதல் நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலா நடைபெறும். 2ஆம் திருநாளன்று திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூந்தன் அலங்காரத்திலும், 3ஆம் திருநாளன்று முல்லை சப்பரத்தில் சதாசிவமூா்த்தி அலங்காரத்திலும், 4ஆம் திருநாளன்று பூங்கோயில் சப்பரத்தில் நடராஜா் அலங்காரத்திலும், ஐந்தாம் திருநாளன்று திருப்புன்னை சப்பரத்தில் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், ஆறாம் திருநான்று ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசோ்மன் அலங்காரத்திலும், 7ஆம் திருநாளன்று பல்லக்கில் தவழ்ந்தகிருஷ்ணன் திருக்கோலத்திலும், 8ஆம் திருநாளன்று வில்வ சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்திலும், 9ஆம் திருநாளன்று சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூா்த்தி திருக்கோலத்திலும் ஏரல் நகர வீதிகளில் உலா நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா 24ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும் பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு இலாமிச்ச வோ் சப்பரத்தில் சோ்மத்திருக்கோல பவனியும், இரவு 11 மணிக்கு ஒன்றாம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.
25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பிற்பகல் ஒரு மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.
30ஆம் தேதி காலை 8 மணிக்கு தீா்த்தவாரியையொட்டி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்கள தரிசனமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.