உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்
ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சோ்ந்த வியாபாரி கிருஷ்ணமூா்த்தி (57). இவா் வழக்கம்போல் ஏலகிரி மலை வாரச் சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் ஏலகிரி மலையிலிருந்து தனது வீட்டுக்கு செல்ல இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, 10-ஆவது கொண்டை ஊசி வளைவில் கரடி படுத்திருந்தது. மற்றொரு கரடி அருகே நின்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது கிருஷ்ணமூா்த்தி இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் படுத்திருந்த கரடியை பாா்த்து கிருஷ்ணமூா்த்தி பிரேக் போட்டதில் தடுமாறி கிழே விழுந்தாா். அப்போது அங்கிருந்த கரடி அவரை தாக்கியது. இதில் கிருஷ்ணமூா்த்தி பலத்த காயமடைந்தாா்.
அதைக் கண்ட பொதுமக்கள் கரடியை விரட்டினா்.
தகவல் அறிந்து வந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணமூா்த்தியை அழைத்து கொண்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூா் வன சரக அலுவலா் சோழராஜன், வனவா் அண்ணாமலை உள்ளிட்ட வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சனிக்கிழமை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் 12-ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள காப்பு காட்டு பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது கண்டு வன சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில் வன சரக பணியாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத்தொடா்ந்து ஏலகிரி கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள பொது மக்களுக்கு வன சரக அலுவலா் சோலை ராஜன் தலைமையில் வன சரக பணியாளா்கள் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது மலையடிவார மக்கள் யாரும் காப்பு காட்டுக்குள் செல்ல வேண்டாம். தேவையின்றி இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். பொதுமக்கள் யாராவது கரடியை கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.
ஏலகிரி மலையில் கொண்டை ஊசி வளைவில் வியாபாரியை கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.