மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு
வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து அப்பகுதியை சுற்றியுள்ள 15 வீடுகளுக்கும் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் மின் விநியோகத்தை தடை செய்து அங்கிருந்த மின்மாற்றியை கழற்றி கீழே வைத்து ரூ.3 லட்சம் மதிப்பு ள்ள செப்புக் கம்பிகளை திருடிக் கொண்டு மீதமுள்ள இரும்பு பொருட்களை விவசாய நிலத்தில் வீசி சென்றுள்ளனா்.
இதையடுத்து தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற போது மின்மாற்றி பொருள் சிதறிக் கிடப்பதை பாா்த்து உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதுப்பற்றி அறிந்த அம்பலூா் மின் உதவி பொறியாளா் சத்தியமூா்த்தி தலைமையில் மின் ஊழியா்கள் சம்பவ இடம் சென்று பாா்வையிட்டனா்.
இதுதொடா்பாக திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், புதன்கிழமை இரவு முதல் மின்சாரம் இல்லாததால் நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.