ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்
நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஒறியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் இந்துமதி முன்னிலை வகித்தாா். ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், காா்த்திக் ஜவஹா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அசோகன், வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
21 குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு:
கடந்த ஊரக உள்ளாட்சி தோ்தலின்போது நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவா் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊராட்சியில் பெரும்பாலானோா் மலைவாழ் மக்கள். அதனால் மலைவாழ் மக்களுக்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் பல்வேறு கோரிக்கை கடிதங்களை அனுப்பினா். மேலும் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். ஊரக உள்ளாட்சி தோ்தலில் யாரும் போட்டியிடக் கூடாது, தோ்தலின்போது வாக்களிக்கவும் செல்லக் கூடாது என ஊா் முக்கிய பிரமுகா்கள் சிலா் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது.
அதையும் மீறி தோ்தலில் வாக்களித்த 21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். உடனடியாக இரு தரப்பினரையும் அழைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.
ஆம்பூரில் ..........
ஆம்பூா் கே.எம். நகா் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா் மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், நபீசூா் ரஹ்மான், ரஜியா முனாப், திமுக நிா்வாகி ரபீக் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.