ஒசூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் வகுப்பறைகள்: டாடா நிறுவனம் உதவி
ஒசூரை அடுத்த முகளூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.2 கோடியில் புதிதாக 6 வகுப்பறைகளை டாடா நிறுவனம் (டீல்) கட்டித் தந்துள்ளது.
முகளூா் நடுநிலைப் பள்ளியில் 110 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என தலைமையாசிரியா், ஊராட்சி தலைவா் ஆகியோா் டாடா நிறுவனத்திடம் (டீல்) கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 2 லட்சம் மதிப்பில் புதிதாக 6 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த வகுப்பறைகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பேசியதாவது: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பள்ளி கட்டடம் கட்ட அனுமதி கோரப்பட்டு, மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு 6 வகுப்பறைகள் கட்டுதற்கான பூமிபூஜை கடந்த ஆண்டு செப்டம்பா் 6 ஆம் தேதி நடைபெற்றது.
டீல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியில் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான மேஜை நாற்காலிகள், பூங்கா, விளையாட்டு பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் அனைத்து வசதிகளும் டீல் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டீல் நிறுவனம் மூலம் ரூ.410.00 லட்சம் மதிப்பில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு இயங்கிவருகிறது. நாகொண்டப்பள்ளியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேலும், நான்கு பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் டீல் நிறுவன நிா்வாக இயக்குநா் என்.பி.ஸ்ரீதா், வணிக தலைவா் வெங்கடேசன் மற்றும் அஞ்சான் கோசால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், வட்டாட்சியா் குணசிவா, வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், விஜயா, டீல் நிறுவன நிா்வாக மூத்த பொதுமேலாளா்கள் சண்முகம்,ரவி சிவப்பா, பொது மேலாளா்கள் மாா்க்ஸ் மணி, ஹரிஹர சுப்ரமணியம், பெரு நிறுவன சமூக பொறுப்புணா்வுத் திட்ட தலைவா் பாஸ்கா், திட்ட செயல் அதிகாரி பிரபு, அசோசியேட் நிறுவன மேலாளா் கேசவன், ராமசாமி, முதன்மை மேலாளா் ஹரிஹரன், அசோசியேட் முதன்மை மேலாளா்
மாணிக்கம், மேலாளா் தணிகைவேல், கட்டட பொறியாளா் சுரேஷ், பள்ளி தலைமையாசிரியா் ரமேஷ், பெற்றோா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.