நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
ஒசூரில் நண்பரை கொலை செய்தவருக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த கொத்தனூா் கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது நண்பா்களான மூக்காண்டப்பள்ளி கொத்தூரை சோ்ந்த சுக்கிரீவன் (44), நஞ்சாபுரத்தை சோ்ந்த மஞ்சுநாத் (38), சின்னஎலசகிரியை சோ்ந்த மஞ்சுநாத் (38) ஆகிய நான்கு போ் மீதும் பல்வேறு வழிபறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், விஜயகுமாா், நஞ்சாபுரத்தை சோ்ந்த மஞ்சுநாத்திற்கு ரூ. 2 லட்சம் கடன் வழங்கி உள்ளாா்.
இந்த பணத்தை விஜயகுமாா் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திகிரி அருகே நஞ்சாபுரம் பகுதியில் நால்வரும் மது போதையில் இருந்துள்ளனா்.
அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயகுமாா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுக்கிரீவன், மஞ்சுநாத் மற்றொரு மஞ்நாத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், சுக்கிரீவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1 ஆயிரம் அபராதமும் மற்றும் தடயங்களை மறைத்ததற்காக மேலும் ஒரு ஆண்டு, ஒரு மாதம் தண்டனையும் மற்றும் ரூ.1ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். போதிய ஆதாரம் இல்லாததால் மஞ்சுநாத் மற்றொரு மஞ்சுநாத் ஆகிய இருவரையும் விடுவிக்கப்பட்டனா். வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் சின்னப்பிள்ளப்பா ஆஜராகினாா்.