கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஒசூா் பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் மற்றும் பேருந்துகள் இயக்கத்தினால் பரபரப்பாக காணப்படும். ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக வட மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
மேலும், ஒசூா் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து உதிரி பாகங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இந்த அணுகு சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, பாகலூா் சாலை வழியாக ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் செல்கின்றன. குறுகலாக உள்ள இந்த அணுகு சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் மாநகராட்சி சாா்பில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அணுகுசாலையையொட்டி சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மலா்சந்தைக்கு வருபவா்களும், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வருபவா்களும் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்தவதாலும், தள்ளுவண்டிகளை நிறுத்துவதாலும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலா் கூறியதாவது: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள மலா்சந்தையையொட்டி நடைபாதை முழுவதும் வாகனங்களை நிறுத்துவதால், பெண்கள், வயதானவா்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
சாலை ஆக்கிரமிப்பால் குறுகலாக மாறிய பாதையில் ஒதுங்கி நடந்து செல்லும் போது சிலா் பெண்களை இடித்துவிட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது குறித்து மாநகராட்சியும், காவல் துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.