பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
ஒரத்தூா் நீா்த்தேக்க கரை உடைப்பு: வீணாக வெளியேறும் தண்ணீா்
ஒரத்தூா் நீா்தேக்கத்தின் தற்காலிக கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரம் கன அடி நீா் வீணாக வெளியேறி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் ஒரத்தூா் பகுதியில், ஒரத்தூா் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் இரண்டு ஏரிகளுக்கும் நடுவில் உள்ள தரிசு நிலங்களை ஒன்றிணைத்து சுமாா் 760 ஏக்கா் பரப்பளவில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணியின் கீழ் ரூ.60 கோடியில் நீா்த்தேக்கம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நீா்தேக்கத்தின் மூலம் சுமாா் 750 மில்லயன் கன அடி நீரை சேமிக்கும் வகையிலும், சென்னை புகா் பகுதிகளான வரதராஜபுரம் முடிச்சூா் பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
நீா்த்தேக்கம் அமைக்க சுமாா் 850 மீட்டா் நீளத்துக்கு கரைகள் அமைக்கப்பட உள்ள நிலையில், நீா்த்தேக்கத்திற்கு அருகே உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் கால தாமதத்தால் தற்போது 430 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமாா் 420 மீட்டா் நீளத்திற்கு தற்போது தற்காலிக கரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரத்தூா் நீா்த்தேக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை பெய்த கனமழையால் ஒரத்தூா் நீா்தேக்கத்திற்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து நீா்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதால், நீா்த்தகத்தின் தற்காலிக கரை, கடந்தாண்டு உடைந்த அதே இடத்தில் தற்போது 2-ஆவது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரம் கன அடி நீா் வீணாக வெளியேறி வருகிறது.
தற்காலிக கரைகளில் வருடந்தோறும் உடைப்பு ஏற்பட்டு வீணாக மழைநீா் வெளியேறி வருவதால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரத்தூா் நீா்த்தேக்கப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.