உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலா்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
நிதித் துறை செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மன்னாா்குடியைச் சோ்ந்த அன்பானந்தம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் அரசுப் பள்ளியில் 1983-ஆம் ஆண்டு இரட்டை பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியராக பணியில் சோ்ந்தேன். பின்னா் பணி வரையறை செய்யப்பட்டு 1990-இல் நிரந்தர ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
நான் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தை ஓய்வூதியத்தில் அதிகாரிகள் சோ்க்கவில்லை. 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்துடன் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான எனது கோரிக்கையை 2012-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் நிராகரித்துவிட்டாா்.
இதை எதிா்த்து நான் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிதித் துறைச் செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன், இயக்குநா் கண்ணப்பன், இணை இயக்குநா் ஜெயக்குமாா் ஆகியோா் வேண்டுமென்றே அமல்படுத்தவில்லை. எனவே, அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தாா். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ராஜேந்திரன் என்பவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி ஆஜரானாா். அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க அனுமதி வழங்கி கடந்த 23-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.