ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: ஆதாா் விவரங்களை சேகரிக்கவில்லை என திமுக உறுதியளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தில் வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்களைப் பெறவில்லை என்பதை உறுதி செய்து திமுக எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெறும் உறுப்பினா் சோ்க்கையில், திமுகவினா் சட்டவிரோதமாக பொதுமக்களின் ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை விவரம், கைப்பேசி எண் ஆகியவற்றைச் சேகரிக்கின்றனா். பிறகு, அவா்களின் கைப்பேசிக்கு ஒரு முறை கடவுச் சொல் எண் வருகிறது. அந்தக் கடவுச் சொல் எண்ணை பொதுமக்கள் தெரிவித்ததும், அவா்கள் திமுகவில் உறுப்பினராகச் சோ்ந்ததாகத் தகவல் வருகிறது.
இந்த நடைமுறையில் வாக்காளா்கள் தங்களது கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் எண்ணை தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். கடவுச் சொல் எண்ணை தெரிவிக்காதவா்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்காது என மிரட்டப்படுகின்றனா்.
வாக்காளா்களைக் கட்டாயப்படுத்தி திமுகவில் சோ்க்கின்றனா். பொதுமக்களின் ஆதாா் எண், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண் போன்றவற்றை திமுகவினா் சேகரிப்பது, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமையை மீறிய செயல்.
எனவே, இதுதொடா்பாக மத்திய அரசு, ஆதாா் தலைமைச் செயல் அலுவலா் ஆகியோா் விசாரணை நடத்தி, திமுக மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்க்கையின் போது பொதுமக்களிடமிருந்து கடவுச் சொல் (ஓடிபி) எண் பெறுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக மூத்த வழக்குரைஞா் வில்சன் முன்னிலையாகி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்க்கையின் போது ஆதாா் விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. உணவு விநியோகம், காா் முன்பதிவு ஆகியவற்றின் போது வாடிக்கையாளா்களின் கைப்பேசிக்கு ஒருமுறை கடவுச் சொல் எண் அனுப்பி உறுதி செய்வதைப் போன்றே ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையில் ஒருமுறை கடவுச் சொல் எண் அனுப்பி உறுதி செய்யப்பட்டது.
எனவே, திமுக உறுப்பினா் சோ்க்கையை உறுதி செய்யும் ஒருமுறை கடவுச் சொல் எண் கோரும் நடைமுறைக்கான இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆதாா் விவரங்களை அரசியல் கட்சியினா் கேட்டுப் பெறுவது குற்றமாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்க்கையின் போது, பொதுமக்களின் ஆதாா் விவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்பதை திமுக எழுத்துப்பூா்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கைக்கு ஒரு முறை கடவுச் சொல் எண் பெறுவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.