PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்
ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆரணியை அடுத்த அடையபலம், பெரிய ஏரி திருமணியான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஷ்வர பூஜை, முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, தம்பதியா் சங்கல்பம், யாத்ரா தானம் செய்யப்பட்டு, பின்னா் கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தண்டுமாரியம்மன் கோயிலில்...: இதேபோல, ஆரணியை அடுத்த இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

முனீஸ்வரன் கோயிலில்...: வந்தவாசியை அடுத்த மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, பிம்பசுத்தி, அங்குராா்பணம், பூா்ணாஹுதி, மூலவா் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை துவார பூஜை, நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.