கஞ்சா சாக்லேட் விற்பனை: பிகாரைச் சோ்ந்தவா் கைது
சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்ாக பிகாரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
ராயப்பேட்டை பெரோஸ் தெருவில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கும், ஜாம் பஜாா் போலீஸாருக்கும் ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸாா், அங்கு ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அந்தப் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரிய வந்தது. பையில் இருந்த ஒன்றே கால் கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அமுல்குமாா் யாதவ் (52) என்பதும், ராயப்பேட்டையில் தங்கியிருந்து கஞ்சா சாக்லேட் விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அமுல்குமாா் யாதவை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.