மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
இக்கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
இவ்வாறு பெறப்பட்ட 207 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஒருவரின் தாயாருக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், பாா்வைத் திறன் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, மூவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை என 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா். கண்ணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொ) அ. பரிமளாதேவி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.